News Image

காற்றே இல்லாத நிலவில் ஆக்ஸிஜன் தயாரிக்க திட்டம் - எப்படி தெரியுமா?

By Admin

ஒரு ராட்சச கோளத்தின் உள்ளே பொறியாளர்கள தங்களது உபகரணங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னே வண்ணமயமான வயர்களால் சூழப்பட்ட பளபளப்பான உலோக கருவி ஒன்று இருந்தது. இந்தக் கருவி, காற்றே இல்லாத நிலவில் ஆக்ஸிஜன் தயாரிக்க உதவும் என நம்புகிறார்கள். அந்த கோளத்தை விட்டு அவர்கள் வெளியேறியவுடனே பரிசோதனை தொடங்கியது. பெட்டி போன்ற அந்த கருவியினுள் -நிலவின் மண்ணில் காணப்படுவதற்கு இணையான துகள்கள் மற்றும் கூரான கற்களால் ஆன ரெகோலித் ரசாயன கலவை சிறிய அளவில் செலுத்தப்படுகிறது. விரைவில் அந்த கலவை உருகி அரை நீர்ம வடிவெடுத்துவிட்டது. அதில் ஒரு அடுக்கு 1650 செல்சியஸ் வெப்பத்திற்கு மேல் சூடுபடுத்தப்படுகிறது. அதனுடன் சில எதிர்விளைவு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டவுடன், ஆக்ஸிஜன் அடங்கிய குமிழிகள் எழத் தொடங்குகின்றன. "பூமியில் பரிசோதிக்கக் கூடிய எல்லாவற்றையும் சோதனை செய்து பார்த்துவிட்டோம்,நிலவுக்கு செல்வது அடுத்த கட்டம்"என்கிறார் சியரா ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருக்கும் பிராண்ட் வைட். சியரா ஸ்பேஸ் நிறுவனத்தின் பரிசோதனை நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் 2024 கோடையில் நடைபெற்றது. எதிர்காலத்தில் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்ய செல்லும் விண்வெளி வீரர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கூடிய அமைப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் விண்வெளி வீரர்கள் சுவாசிக்க மட்டுமல்ல, செவ்வாய் உள்ளிட்ட தொலைதூர கோள்களுக்கு நிலவிலிருந்து விண்கலங்கள் செலுத்தப்பட்டால், அப்பணிக்கான ராக்கெட் எரிபொருள் தயாரிக்கவும் ஆக்ஸிஜன் தேவைப்படும். நிலவில் வசிப்போருக்கு உலோகமும் தேவைப்படலாம். அவற்றை அவர்கள் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் பொருள்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். இதுபோன்ற வளங்களை திறம்பட பிரித்தெடுக்கும் ஆற்றல் மிக்க உலைகளை உருவாக்கமுடிவதை பொறுத்தே இவையெல்லாம் அமையும்.