ஓ ஜஸ்பிரித் பும்ரா, என்னுடைய அழகான சகோதரா உலகக் கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளரே. இங்கிலாந்து அணியை நீங்கள் சிதறடிக்கும் காட்சியை எங்களால் பார்க்க முடியவில்லையே" ஆங்கிலத்தில் வார்த்தைகளை அமைத்து, பிரிட்டிஷ் ராக்பாடகர் கிறிஸ் மார்டின் தனது அகமதாபாத் இசைக்கச்சேரியில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் புகழ்ந்து பாடியுள்ளார். கடந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளின் பேட்டர்களையும் தனது துல்லியமான லைன் லென்த் பந்துவீச்சால் அலறவிட்டவர் பும்ரா. இந்தநிலையில், 2024-ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட்டர் (ICC Cricketer Of The Year 2024) விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை பும்ரா எடுத்துள்ளார். இதில் இவரின் சராசரி 14.92, ஸ்ட்ரைக் ரேட் 30.16. 2024 ஆண்டு முழுவதும் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்களை வீசி, 2.96 எக்கானமி ரேட் வைத்துள்ளார், அதாவது ஓவருக்கு 2.96 ரன்கள் தான் வழங்கியுள்ளார்.