தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக 10/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்! இலங்கையில் நாடளாவிய ரீதியில் நேற்று (பிப்ரவரி 9) முற்பகல் 11.30 மணியளவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபை அறிவித்தது. எவ்வாறிருப்பினும் பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.