மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்த பட்ஜெட் உரையின் கடைசி நேரத்தில் தான் வருமான வரி தொடர்பான இந்த அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி எம்.பிக்கள் புன்னகையுடன் மேசையை தட்டி வரவேற்றனர். இந்த அறிவிப்பிலிருந்து நடுத்தர குடும்பத்தினர் பயனடைவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.முன்னதாக, ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு இந்த விலக்கு இருந்தது. இதற்கு முன்பு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரியிலிருந்து ரூ.75 ஆயிரம் என்பது நிலையான கழிவாக (Standard deduction) இருந்தது. அதாவது, ரூ.75,000ஐ திரும்பி பெற்றுக்கொள்ள முடியும். தற்போது புதிய அறிவிப்பின் மூலம், ரூ.75,000 கழிவு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 2014இல் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வரம்பு 2019இல் ரூ.5 லட்சமாகவும் 2023இல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்கு அளிப்பதாகவும், அதைக் கருத்தில்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களின் வருமான வரி சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.