அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி அன்று பதவியேற்றார். அதன் பிறகு பல முக்கியமான முடிவைகளையும், உத்தரவுகளையும் வெளியிட்டார். இதில் அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், உலக சுகாதார நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது, அந்த அமைப்பு வழங்கி வந்த தரமான பணிகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 1948 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அதன் சேவைகளால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறது. இத்தகைய முடிவால் பொது சுகாதாரத்தில் காச நோய், எய்ட்ஸ், மற்றும் இதர நோய் தொற்றுகளை கண்காணிக்கவும், பெருந்தொற்றுக்கு தயார் நிலையில் இந்தியா தன்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது சுகாதார துறையில் நிபுணர்களாக உள்ள மருத்துவர் ஶ்ரீநாத் ரெட்டி உள்ளிட்ட பலரும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது சீனாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பாக அமையும் என்று கூறுகின்றனர். ரெட்டி பொது சுகாதார நிறுவனத்தின் (Public Health Foundation) தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. 2022-23 காலகட்டங்களில் அமெரிக்கா இந்த அமைப்பின் பணிகளுக்காக 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது. தற்போது நிலவும் சூழலை பயன்படுத்தி சீனா இங்கே தன்னுடைய பங்களிப்பை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் சீனாவின் பங்களிப்பு குறித்து சந்தேகிப்பதாக தெரிவிக்கிறார் மருத்துவர் எஸ்.எஸ். லால். அவர் சர்வதேச சுகாதார அமைப்பின் ஆசியா - பசுபிக் பிராந்தியத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். "அமெரிக்காவைப் போன்று சீனா தகவல்களை பகிராது," என்ற கவலையை அவர் வெளிப்படுத்தினார்.