News Image

பேட் கேர்ள் டீசர்: கலாசாரம், சாதி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்? படத்தின் இயக்குநர் கூறியது என்ன?

By Admin

சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. ஒரு பக்கம், ஆண்களின் உலகையே காட்டி வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் தனித்துவமான குரலாக இந்த டீசர் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் கதையின் நாயகியைக் காட்டியதற்கும், நாயகி குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் எதிர்மறை கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'பேட் கேர்ள்'. பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தை வெற்றிமாறனுடன் சேர்ந்து வழங்கவுள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஜனவரி 30 அன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில், டைகர் போட்டிப் பிரிவில் இது திரையிடப்படவுள்ளது. அஞ்சலி சிவராமன், ஷாந்தி ப்ரியா, ஹ்ரிது ஹரூன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ப்ரீதா ஜெயராமன், ஜகதீஷ் ரவி, ப்ரின்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.